கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், கரையோர சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது.;

Update:2025-08-19 08:00 IST

கே.ஆர்.எஸ். அணை

மைசூரு,

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்துக்கு உட்பட்ட வயநாடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. ஏற்கனவே இந்த 2 அணைகளும் நிரம்பி விட்டதால் அணைகளுக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.54 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரத்து 52 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அது மதியம் 3 மணிக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டது. இதேபோல் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,283.68 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 539 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 23 ஆயிரத்து 846 கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

அதன்படி தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 846 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து எந்நேரம் வேண்டுமானாலும் 1.20 லட்சம் கன அடியாக உயர்த்தப்படலாம் என்றும், அதனால் காவிரி கரையோர மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தும் நீர்ப்பாசன துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படியும் வருவாய் துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மேலாண்மை துறை, போலீஸ் துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, மாவட்ட பஞ்சாயத்து மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

காவிரியில் வினாடிக்கு 1.23 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டு இருப்பதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி கரையில் உள்ள வழிபாட்டு தலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. நிமிஷாம்பா கோவில் உள்பட ஏராளமான கோவில்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மண்டியாவில் உள்ள ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயம் மூழ்கியது.

சுற்றுலா தலங்கள் மூடல்

இதனால் அங்கு படகு குழாம் மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் திருமாகூடலு திருவேணி சங்கமம் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் காவிரி கரையோரத்தில் உள்ள பல சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்