காதலை ஏற்க மறுத்த சிறுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
சிறுமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குத்தன்னூர் பகுதியை சேர்ந்தவர் அகில் (வயது 25). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். இதற்கிடையே சிறுமியை காதலிப்பதாக அகில் கூறி உள்ளார். அதை ஏற்க சிறுமி மறுத்தார். அதோடு அகிலுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அகில் தனது நண்பர் ராகுல் (24) என்பவருடன் சேர்ந்து சம்பவத்தன்று சிறுமியின் வீட்டுக்கு சென்றார். அங்கு நள்ளிரவில் படுக்கை அறை ஜன்னல் மீது கல் வீசினர். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. பின்னர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், மழையில் பெட்ரோல் குண்டு நனைந்து வெடிக்காமல் போனது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குழல்மண்ணம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், இந்த செயலில் ஈடுபட்டது ராகுல், அகில் என்பதை உறுதிப்படுத்தினர். விசாரணையில் காதலை ஏற்க மறுத்ததால் சிறுமி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதும், யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.