மும்பையில் வரலாறு காணாத மழை... வெள்ளக்காடான சாலைகள் - மக்கள் பாதிப்பு
அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன.;
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு இம்முறை கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகி உள்ளது.
குறிப்பாக, கடந்த 8 மணிநேரத்தில் மட்டும் 177 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் மும்பை நகரில் இல்லாத மழை அளவாகும். இடைவிடாத மழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தாதர் நகரம், கிங் சர்க்கிள் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து காணப்படுகிறது. மழை மற்றும் வெள்ளநீரில் பலமணி நேரம் வாகன ஓட்டிகள் தவித்தபடியே இருக்கும் சூழல் உள்ளது. அந்தேரி சுரங்கப்பாதை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ரெயில், விமான சேவைகளும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே என பல நகரங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களும் (அத்தியாவசிய சேவைகள் தவிர) மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன.
கண்காணிப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி எங்கும் பயணிக்க வேண்டாம், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.