2 அடுக்காக மாறும் ஜி.எஸ்.டி... மாநில மந்திரிகள் குழு நாளை ஆலோசனை

மாநில மந்திரிகள் குழு நாளையும், நாளை மறுநாளும் ஆலோசனை நடத்துகிறது. இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகிறார்.;

Update:2025-08-19 13:37 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

தற்போது, ஜி.எஸ்.டி. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது. உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பூஜ்யம் அல்லது 5 சதவீத வரி அடுக்கிலும், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற பாவ பொருட்கள் 28 சதவீத வரி அடுக்கிலும் வருகின்றன.

சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று கூறினார். அதாவது, 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகள் கொண்டதாக ஜி.எஸ்.டி.யை சீர்திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 12 சதவீத வரிவிதிப்பில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படும். 28 சதவீத வரிவிதிப்பில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படும். இதன்மூலம், ஜி.எஸ்.டி. குறைந்து, சாமானியர்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறையும்.

இதுதவிர, 40 சதவீதம் என்ற சிறப்பு வரி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதில், புகையிலை, பான் மசாலா, ஆன்லைன் விளையாட்டு உள்பட 5 முதல் 7 பொருட்கள் மட்டுமே இடம்பெறும்.

2 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. மாற்றப்படுவது பற்றி ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தத்துக்கான மாநில மந்திரிகள் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநில துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, இக்குழுவின் அமைப்பாளராக உள்ளார். உத்தரபிரதேச நிதி மந்திரி சுரேஷ்குமார் கன்னா, ராஜஸ்தான் சுகாதார மந்திரி கஜேந்திர சிங், மேற்கு வங்காள நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா, கர்நாடக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரே கவுடா, கேரள நிதி மந்திரி கே.என்.பாலகோபால் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மேற்கண்ட 6 பேரை கொண்ட மாநில மந்திரிகள் குழு கூட்டம் நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. அதில், 2 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. மாற்றப்படுவது பற்றி குழு ஆலோசனை நடத்துகிறது.

மத்திய அரசு இக்குழுவில் இடம்பெறவில்லை. இருப்பினும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை மந்திரிகள் குழு நன்றாக புரிந்து கொள்ளவும், சீர்திருத்தத்தின் பின்னால் உள்ள சிந்தனையை தெரிந்து கொள்ளவும் நிர்மலா சீதாராமன் உரை உதவும் என்று கருதப்படுகிறது.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்துக்கு மாநில மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தால், அதன்பிறகு, நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் அடுத்த மாதம் பரிசீலிக்கும். கவுன்சிலும் ஒப்புதல் அளித்தால், 2 அடுக்குமுறை அமலுக்கு வரும்.

இதற்கிடையே, ஜி.எஸ்.டி.யில் மத்திய, மாநில அரசுகள் சம பங்குதாரர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “தற்போதைய ஜி.எஸ்.டி.யில், மத்திய, மாநில அரசுகள் வருவாயை சமமாக பகிர்ந்து கொள்கின்றன. அதுதவிர, பிரிக்கத்தக்க வரி தொகுப்பில் மத்திய அரசின் பங்கான 41 சதவீதம், நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இழப்பீட்டு செஸ், மாநிலங்களுக்கு முழுமையாக அளிக்கப்படுகிறது.

வரிகுறைப்புக்கு பிறகு வருவாய் எப்படி இருக்கும் என்ற கவலை மத்திய அரசுக்கும் இருக்கிறது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?. இருப்பினும், வரிகுறைப்பால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, ஜி.எஸ்.டி. வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

மேலும் செய்திகள்