பங்கு வர்த்தகத்தில் முதலீடு.. கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்ளிட்டோரிடம் ரூ.11 கோடி மோசடி செய்த மர்ம நபர்கள்

பெங்களூருவில் கடந்த 21 நாட்களில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்ளிட்டோரிடம் ரூ.11 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-08-19 08:20 IST

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சைபர் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி பொதுமக்களுக்கு போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சைபர் மோசடி கும்பலிடம் பணத்தை பறி கொடுப்பது மட்டும் குறையவில்லை. பெரும்பாலும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தான் அதிகளவில் மோசடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதன்படி, மாரத்தஹள்ளியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும்படி ரவிசந்திரனிடம் மர்மநபர்கள் கூறி இருந்தனர். அதனை நம்பிய அவர், மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சத்தை குறிப்பிட்ட இடைவெளியில் அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாக கூறிய மர்மநபர்கள், ரூ.1.47 கோடியை திரும்ப கொடுக்காமல் ரவிசந்திரனை மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து ஒயிட்பீல்டு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவருடன் சேர்த்து பெங்களூருவில் கடந்த 21 நாட்களில் மட்டும் பணம் முதலீடு செய்யும்படியும், வீட்டில் இருந்து செய்யும் வேலை வாங்கி கொடுப்பதாகவும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி ரூ.11.25 கோடியை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.

மர்மநபர்களிடம் பணத்தை இழந்த மக்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் புகார்களும் அளித்துள்ளனர். அதன்படி, 21 நாட்களில் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களில் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த 48 வழக்குகளில் சம்பந்தப்பட்ட மர்மநபர்களை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்