தேர்தல் ஆணையம்தான் முதலில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்: காங்கிரஸ் பதிலடி

தீவிரமான பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.;

Update:2025-08-18 20:45 IST

புதுடெல்லி,

பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் நேற்று விளக்கம் அளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:

வாக்கு திருட்டு, இரட்டை ஓட்டு போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டு தேர்தல் கமிஷன் அஞ்சாது. வாக்காளர்களும் அஞ்ச மாட்டார்கள். சிலர் செய்யும் அரசியல் குறித்து கவலைப்படாமல், அனைத்து தரப்பு வாக்காளர்களுடன் தேர்தல் கமிஷன் உறுதியாக செயல்படும். தேர்தல் பணியில் ஒரு கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இத்தகைய வெளிப்படையான முறையில் ‘வாக்கு திருட்டு’ நடக்குமா?

வாக்கு திருட்டு நடந்ததாக சொல்பவர், ஒரு குறிப்பிட்ட தொகுதியின் வாக்காளராக இல்லாவிட்டால், அவர் சாட்சி என்ற முறையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதநிலையில், அவர் புகார் சொல்லும் ஒன்றரை லட்சம் வாக்காளர்களுக்கும் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்ப முடியுமா? எனவே, புகார் சொல்பவர் (ராகுல்காந்தி) 7 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரது ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு ஆதாரமற்றது, செல்லாது என்றுதான் கருதப்படும். இத்தகைய குற்றச்சாட்டு சொல்பவர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.சூரியன் கிழக்கில்தான் உதிக்கும். ஒருவர் சொல்கிறார் என்பதற்கு வேறு திசையில் உதிக்குமா?இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், டெல்லியில் ' இந்தியா' கூட்டணியை சேர்ந்த காங்கிரசின் கவுரவ் கோகோய், சமாஜ்வாதியின் ராம்கோபால் யாதவ், திரிணமுல் காங்கிரசின் மெகுவா மொய்த்ரா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பேட்டி கொடுத்தனர். அப்போது, கவுரவ் கோகோய் கூறியதாவது:

தீவிரமான பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மராட்டியத்தில் கூடுதல் வாக்குகள் சேர்க்கப்பட்டது, மஹாதேவ்புராவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வீடியோ பதிவு அழிப்பு குறித்து விளக்கம் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்காத அதிகாரிகளின் கைகளில் தேர்தல் ஆணையம் உள்ளது. வாக்காளர் பட்டியல் தெளிவாக உள்ளது என தேர்தல் ஆணையம் முதலில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பிறகு நாங்கள் கட்டுப்படுகிறோம்” என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்