மானூரில் மது அருந்தியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை: 3 பேர் கைது
மானூர் பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டார்.;
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் கடந்த 14ம்தேதி 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டதன் பேரில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த இறப்பு சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் மானூர் காவல் நிலையத்தில் சந்தேக மரண வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாலிபரின் மரணத்திற்கான காரணத்தினை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டதன் பெயரில், ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா மற்றும் மானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் தீவிரமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கின் புலன் விசாரணையில் இறந்த நபர் திருநெல்வேலி மாநகரம் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 19) என கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற தீவிர புலன் விசாரணையில், இறந்து போன நபருடன் நெருக்கமாக பழகிய நபர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு, அவர்களை பற்றிய தகவல்களை சேகரித்ததில், இறந்து போன நபர் செப்டிக் டேங் கிளினிங் வேலையில், தன்னுடன் வேலை செய்த தென்காசியைச் சேர்ந்த இசக்கிமுத்து(21), முக்கூடலைச் சேர்ந்த இசக்கிமுத்து(23) மற்றும் பழையபேட்டையைச் சேர்ந்த தங்ககுமார்(23) ஆகியோருடன் ஒன்றாக மது அருத்தியபோது ஏற்பட்ட தகராறில், தாக்கியதில் கொலை செய்யப்பட்ட விபரம், அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்து தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆள் அரவமற்ற பகுதியில் மர்மமான முறையில் இறந்த இந்த சந்தேக மரண வழக்கினை துரித நேரத்தில் கண்டறிந்து, இறந்த நபரின் அடையாளத்தினை கண்டறிந்து, அவரது இறப்பிற்கு காரணமான கொலை குற்றவாளிகளை கைது செய்த ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா மற்றும் மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் மானூர் காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.