வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சியை முறியடிப்போம் - வைகோ
வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் முறியடிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பீகார் மாநிலத்தில் நடந்து வந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த ஜூலை 26-ந்தேதி நிறைவு பெற்றது. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்த 65 லட்சம் பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பெயர்கள் இல்லாதவர்கள் தங்களது பெயரை சேர்க்க செப்டம்பர் மாதம் 1-ந்தேதி வரை ஒரு மாத காலம் அவகாசம் தரப்படும். அதன்பின்தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த அடிப்படையில்தான் வருகிற நவம்பர் மாதம் பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டின்படி 36 லட்சம் வாக்காளர்கள் நிரந்தரமாக பீகாரில் இருந்து வேறு மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்கள் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார்களோ?, அங்கு அந்த வாக்காளர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த அடிப்படையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 6.5 லட்சம் பேர் தமிழகத்தில் வேலைக்காக வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்களது பெயர்கள் பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி அவர்கள் தங்கள் பெயரை தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். அதில் சென்னையில் மட்டும் மூன்றரை லட்சம் பீகார் மாநிலத்தவர் இருக்கிறார்கள். மேலும் கோவை, திருப்பூரில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்க உள்ளது. அப்போது தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் தங்களது பெயர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிப்பார்கள். அவர்கள் மனு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவார்கள்.
இவ்வாறு நடந்தால் தமிழக வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழகத்தில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர்.
தற்போது 14 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கும். இந்நிலையில் நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழகத்தில் தற்போது உள்ள வெளிமாநிலத்தை சேர்ந்த சுமார் 75 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் நிலை உருவாகலாம்.
அந்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காட்டிற்கு அதிகம் ஆகும். தமிழ்நாட்டை குறி வைத்திருக்கும் பா.ஜ.க., வாக்காளர் பட்டியலில் இத்தகைய ஏற்பாடுகளை செய்து தேர்தலில் ஆதாயம் அடைய முயற்சிப்பதை வேடிக்கைப் பார்க்க முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையம் வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.