கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களுடைய மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கவின் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன்- கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகள் சுபாஷினியை காதலித்தார். இவர்களின் காதலை விரும்பாத சுபாஷினியின் தம்பி சுர்ஜித் இந்த கொலையை செய்துள்ளார். இதுதொடர்பாக சுர்ஜித், அவரது தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தாய், தந்தை, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். வழக்கில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பெற்றோரிடம் முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக, கொலை செய்யப்பட்ட கவினுடைய தந்தை சந்திரசேகருக்கு கொலை மிரட்டல், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் போலீஸ் துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சந்திரசேகருக்கு நேற்று முதல் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சுழற்சி முறையில் 2 போலீசார் இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.