விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 160 சவரன் கொள்ளை
160 சவரன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.;
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருடைய மகன்கள் இருவரும் திருமணமாகி சென்னை மற்றும் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர். முருகேசனும் அவரது மனைவியும் புதுக்கோட்டை பாசில் நகரில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தனது சொந்த ஊரான ராங்கேயத்துக்கு சென்றுவிட்டு இன்று 11 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
இதனிடையே வீட்டில் சோதனை செய்த போது 160 சவரன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் கொள்ளையர்கள் பிடிபடாமல் இருக்க வீட்டில் உள்ள அறைகளில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றது போலீசார் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைகளை கோள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.