பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளியை கீழே தள்ளி கொன்ற திருநங்கை
திருநங்கையிடம் காவலாளி ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.;
சென்னை,
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 57). இவர் காவலாளியாக பணி செய்து வந்தார். இவர் கடந்த 7-ந்தேதியன்று காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஜெசிகா (19) என்ற திருநங்கை நடந்துசென்றதாக தெரிகிறது.
அப்போது நடந்து சென்ற ஜெசிகாவிடம் காவலாளி சேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கடும் கோபம் கொண்ட ஜெசிகா சேகரை பிடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் சேகரின் பின்பக்க தலையில் பலமாக அடிபட்டு காயமடைந்தார். அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் கிடந்ததாக தெரிகிறது.
மறுநாள் காலையில்தான் உயிருக்கு போராடியநிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் பார்த்து, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தளவாய் சாமி விசாரணை நடத்தி திருநங்கை ஜெசிகாவை கைது செய்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.