கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு
உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்திற்கு அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து பெற்றோர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.;
கும்பகோணம்,
கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி காசிராமன் தெரு ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அத்துடன் 19 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் ஜூலை 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று 21 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குழந்தைகளை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் இறந்த குழந்தைகளின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து , புத்தாடைகள் வைத்து கண்ணீரை காணிக்கையாக செலுத்தினர்.
பல தன்னார்வ அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இறந்த குழந்தைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக பிடித்த உணவுப் பொருட்களை படைத்து, மலர் தூவி அவர்களின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர். இந்த துயர சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகினும், பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் நீங்காத வடுவாக மாறிவிட்டது.