பழவூரில் பெண் சந்தேக மரணம்: கொலை குற்றவாளி கைது

பழவூர் பகுதியில் கடந்த மாதம் அடையாளம் தெரியாத பெண் பிரேதம் கண்டறியப்பட்டது.;

Update:2025-07-17 06:04 IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் கடந்த 30.6.2025 அன்று அடையாளம் தெரியாத பெண் பிரேதம் கண்டறியப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் பழவூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்ணின் இறப்பு சம்மந்தமாக, தீவிர விசாரணையை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டார். அந்த புலன்விசாரணையில், சம்பவ இடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள காற்றாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சிசிடிவி தரவுகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் இருந்து கிடைத்த முக்கிய தகவலின் மூலம் மேற்சொன்ன சம்பவத்தில் கன்னியாகுமரி மாவட்டம், மேலமணக்குடியைச் சேர்ந்த அமல்ராஜ்(எ) லிபி (வயது 53) என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதை உறுதிசெய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையின் போது குற்றவாளியான அமல்ராஜ், இறந்த பெண்ணை கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தின் அருகிலிருந்து மோட்டார் பைக்கில் அழைத்துச் சென்று, சுமார் 100 கி.மீ. தூரம் பயணித்து பழவூர் அருகே கொண்டு வந்ததாகவும், அங்கு இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில், தாக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர் இறந்ததாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த பெண்ணின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடக்கத்தில் எந்தவொரு சிறு தடயங்களும் இல்லாத நிலையில், சிசிடிவி பதிவுகளிலிருந்து கிடைத்த சிறு தகவலை பயன்படுத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திறமையான விசாரணையின் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு, இறந்த நபரின் அடையாளமும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விசாரணையை சிறப்பாக முன்னெடுத்த வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ், உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்