பாம்பன் தூக்குப்பாலத்தில் திடீர் கோளாறு... ரெயில்கள் தாமதம்

ஆய்வுக்காக திறந்து மூடியபோது பாம்பன் தூக்குப்பாலத்துக்கான தண்டவாளங்கள் சரியாக இணையாததால் திடீர் கோளாறு ஏற்பட்டது.;

Update:2025-08-13 00:52 IST

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள புதிய ரெயில் பாலம் ரூ.545 கோடியில் கட்டப்பட்டதாகும். பாலத்தின் மையப்பகுதியில் கப்பல் கடப்பதற்காக மேல்நோக்கி திறந்து மூடும் வகையில் தூக்குப்பாலம் உள்ளது. புதிய ரெயில் பாலம் பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதை ஆய்வு செய்வதற்காக நேற்று பிற்பகலில் தூக்குப்பாலம் திறக்கப்பட்டது. அப்போது தூக்குப்பாலத்தை கீழே இறக்க முயன்றபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாலம் முழுமையாக இறங்காமல் பாதியிலேயே நின்றது.

இதற்கிடையே ராமேசுவரத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு மதுரைக்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலானது அக்காள்மடம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு தூக்குப்பாலம் முழுமையாக கீழே இறக்கப்பட்டாலும் தூக்குப்பாலம் தண்டவாளத்தோடு சரியாக இணையாததால் ரெயில்கள் கடந்து செல்ல அனுமதி வழங்கவில்லை.

இதனால் மாலை 4 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் ரெயிலும் அக்காள்மடம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. 5 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும் ராமேசுவரம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு பிறகு தூக்குப்பாலம் இணைப்பு தண்டவாளத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து என்ஜின் மட்டும் கொண்டு வரப்பட்டு, தூக்குப்பாலத்தில் மிக மெதுவாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அதே என்ஜின் மீண்டும் ராமேசுவரம் நோக்கி வந்தது. இதன் பின்னர் தாம்பரம் ரெயிலானது 4 மணி நேரம் தாமதமாக பயணிகளுடன் இரவு 8 மணிக்கு பாம்பன் ரெயில் பாலம் வழியாக தூக்குப்பாலத்தை கடந்து மெதுவாக சென்றது.

தொடர்ந்து 5 மணிக்கு புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கு தூக்குப்பாலத்தை கடந்து சென்றது. வழக்கம்போல் 8.45 மணிக்கு புறப்படும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. ரெயில்கள் தாமதமாக சென்றதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர். மதுரை ரெயிலுக்கான பயணிகள், சென்னை ரெயில்களில் மாறிக்கொண்டதால், அந்த ரெயில் அங்கிருந்து கிளம்பவில்லை.

பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது. இனி கோளாறு ஏற்படாதவாறு செயல்பட வைக்க தக்க நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்