நெல்லை-பெங்களூரு இடையே அம்பை, சிவகாசி வழியாக சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.;

Update:2025-08-13 05:50 IST

நெல்லை,

நெல்லையில் இருந்து சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு சிறப்பு ரெயில் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற 17-ந்தேதி மாலை 4.20 மணிக்கு நெல்லையில் புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், வழியாக மறுநாள் (18-ந்தேதி) மதியம் 12.20 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு 19-ந்தேதி காலை 6 மணிக்கு சிவகாசி வருகிறது. பின்னர் ராஜபாளையம், சங்கரன்கோவில் வழியாக காலை 10.15 மணிக்கு நெல்லை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயிலில் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சிவகாசி வழியாக பெங்களூருவுக்கு ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று சிவகாசி பகுதி தீப்பெட்டி, பட்டாசு, அச்சக அதிபர்கள் மற்றும் ரெயில் பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது தென்னக ரெயில்வே நிர்வாகம் இந்த வழித்தடத்தில் சிறப்பு ரெயில் இயக்க அறிவித்துள்ளது. இதனை இப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து சாத்தூர், விருதுநகர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயிலைதான் இந்த மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தினர். இந்த ரெயிலில் போதிய இருக்கைகள் கிடைக்காமல் அவதியடைந்து வந்த நிலையில் இந்த சிறப்பு ரெயில் அறிவிப்பு இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்