தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் - மத்திய அரசு திட்டம்

தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.;

Update:2025-07-29 04:46 IST

கோப்புப்படம் 

சென்னை,

பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும். அதோடு கூடுதல் பயணிகளை அங்கு கையாள முடியும். இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் ஒரு மெகா திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, குஜராத், மராட்டியம் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டுமான தொகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. அதில் தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் அருகே 1,800 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக 1,200 ஏக்கர் இடம் அதில் இணைக்கப்படும். மொத்தம் 3 ஆயிரம் ஏக்கரில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்படும். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் தூத்துக்குடி பசுமை எரிபொருள் தொழில்துறைக்கான முக்கிய மையமாகவும் உருவாக்கப்படுகிறது. இங்கு உருவாக்கப்படும் கப்பல்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருள்கள் பயன்படும் வகையில் தயாரிக்கப்படும். இது தூத்துக்குடியின் மற்றொரு மணி மகுடமாக இருக்கும்.

ஏற்கனவே, 5 பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டங்கள் (40 லட்சம் டன் ஆண்டுக்கு) தூத்துக்குடியில் ஒப்புதல் பெற்றுள்ளன. இதற்காக மட்டும் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உருவாகும் பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றம் இதனை "பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு" என அடையாளம் காட்டியுள்ளது. இங்கு ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா போக்குவரத்துக்கான பைப்லைன் வழித்தடமும் உருவாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்