அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: “ஆவணங்கள் பறிமுதல்” - அமலாக்கத்துறை தகவல்

சென்னை, திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.;

Update:2025-08-17 12:08 IST

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவருடைய மகன் செந்தில்குமார், பழனி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

ஐ.பெரியசாமி, கருணா நிதி அமைச்சரவையில் கடந்த 2006-2011-ம் காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கு சொத்துக்குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவரது மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீதும் வழக்கு பாய்ந்தது.

இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு கோர்ட்டு விசாரித்தது. இந்த வழக்கில் இருந்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோரை விடுவித்த மாவட்ட கோர்ட்டு உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது. மேலும் இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கும் உத்தரவிட்டது.

இதற்கிடையே ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இந்த சூழ்நிலையில் வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் முகாந்திரம் இருக்கிறதா? என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை திடீர் விசாரணையில் இறங்கி உள்ளது.

இதனையடுத்து சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் அரசு இல்லத்துக்கு நேற்று காலை 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துணையோடு அதிரடியாக நுழைந்தனர். அங்கு அமைச்சர் இல்லை.

வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அந்த அறையின் சாவியை முதலில் பணியாளர்கள் தர மறுத்ததாகவும், உடைத்து சோதனை நடத்துவோம் என்று கூறியதால் அறையை திறந்துவிட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இங்கு மாலை 6 மணியளவில் சோதனை நிறைவடைந்தது.

இதேபோல் சென்னை ஓமந்தூரார் அரசு தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள செந்தில்குமார் எம்.எல்.ஏ. அறையில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் சென்றனர். ஆனால் அந்த அறை பூட்டப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் காத்திருந்தும் அறை கதவை திறக்க யாரும் வரவில்லை. இதைத்தொடர்ந்து பூட்டை உடைத்து சோதனை நடத்தும் சூழலை உருவாக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. விடுதி அலுவலர்கள் வந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. அறையை திறந்து விட்டனர். 4 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் அதிகாரிகள் தங்கள் சோதனையை மேற்கொண்டனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ளது. இந்த வீட்டுக்கு நேற்று காலை 6.45 மணிக்கு 3 கார்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் உள்பட 13 பேர் வந்தனர். முன்பக்க கேட்டை பூட்டிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருடைய மனைவி சுசீலா உள்ளிட்டோர் இருந்தனர். சோதனை நடைபெறுவதை அறிந்ததும் தி.மு.க. தொண்டர்கள் அங்கு திரண்டனர். மாலை 4.30 மணி அளவில் அமைச்சரின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரை அமலாக்கத்துறையினர் சோதனையிட முடிவு செய்தனர். ஆனால் தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சோதனை செய்யவில்லை.

இதைத்தொடர்ந்து 12 மணி நேரம் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை மாலை 6.30 மணிக்கு நிறைவு பெற்றது. சிறிது நேரத்தில் அமலாக்கத்துறையினர் வெளியே வந்து கார்களில் ஏறி சென்றனர். இதற்கிடையே அமைச்சரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவதை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அதோடு தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட முயன்றனர். அவர்களுக்கு மூத்த நிர்வாகிகள் அறிவுரை கூறி தடுத்து நிறுத்தினர்.

அதேபோல் திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடியில் உள்ள செந்தில்குமார் எம்.எல்.ஏ.வின் வீட்டிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது எம்.எல்.ஏ. வீட்டில் இருந்தார். அதை அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அவருடைய வீடு அமைந்த பகுதியில் திரண்டனர். ஆனால் வீட்டின் அருகே யாரும் செல்ல முடியாத அளவுக்கு மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அமைச்சரின் மகள் இந்திராணி திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் வசித்து வருகிறார். நேற்று அவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. இதுதவிர வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பிரிவு பகுதியில் அமைச்சரின் குடும்பத்தினருக்கு சொந்தமான நூற்பாலையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருடைய மகன், மகள், நூற்பாலை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இதன்படி சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன என்றும், பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்