ராமநாதபுரம்: டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் பரிதாப பலி
டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு கூவர்கூட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வந்துள்ளனர். அதில் 11 பெண்கள், 2 ஆண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க டிராக்டரில் வந்திருந்தனர்.
இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், பொதிகுளம் கிராமம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொன்னம்மாள்(60), ராக்கி (65), முனியம்மாள்(65) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 10 பேர் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.