ராஜீவ்காந்தி பிறந்தநாள்: காங்கிரஸ் சார்பில் விருதுகள் அறிவிப்பு

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் விருதுகள் வழங்க திட்டமிட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2025-07-26 18:20 IST

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

மேனாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் அறிவிப்பு:

இந்திய தேசத்தின் முகங்களாய் காட்சியளிக்கும் தலைவர்கள், தியாகிகள் ஆகியோரின் பெயர்களில், சமூகம், அரசியல், இலக்கியம், தத்துவம் ஆகிய தளங்களில் செயற்கரிய செயல்கள் செய்து சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளான ஆகஸ்ட் 20 அன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை சார்பில் கீழ்கண்ட விருதுகள் வழங்கப்படும் என அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

(1) தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தி,

(2) மனிதருள் மாணிக்கம், இந்தியாவின் கட்டமைப்பை உருவாக்கிய பண்டித ஜவஹர்லால் நேரு,

(3) தூய்மை, நேர்மை, எளிமையின் அடையாளமான கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர்,

(4) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்று, இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவிற்கு தலைமையேற்ற பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்,

(5) இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர், சுதந்திரப் போராட்ட வீரர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்,

(6) இந்தியாவின் இரும்பு பெண்மணி ஏழைகளின் பிரதமர் அன்னை இந்திரா காந்தி,

(7) விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அறிமுகம் செய்து சாமானியர்களுக்கும் அதிகாரப் பகிர்வு வழங்கிய பாரத ரத்னா ராஜிவ்காந்தி,

விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. விருதாளர்களை தேர்வு செய்ய ஒரு நடுவர் குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவுக்கு மேனாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் அவர்கள் தலைவராக இருக்க இசைந்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் மேனாள் தலைமை விஞ்ஞானியான, திருமதி சௌமியா சுவாமிநாதன் அவர்களும், சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் திரு. குணசேகரன் அவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தேர்வு செய்யப்பட்ட விருதாளர்களுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் விருதுகள் வழங்க திட்டமிட்டு வருகிறோம். இந்த சிறப்பான நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்த ஒரு குழுவை அமைத்திருக்கிறோம். எனது தலைமையில் செயல்படும் இக்குழுவுக்கு மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் இணைத் தலைவர்களாக இருப்பார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் துணைத் தலைவராக இருப்பார். சா. பீட்டர் அல்போன்ஸ் குழுவின் செயலாளராக செயல்படுவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

Tags:    

மேலும் செய்திகள்