ஆகஸ்ட் 26-ம்தேதி கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம்: பூம்புகார் கப்பல் போக்குவரத்து ஊழியர் சங்க மாநாட்டில் முடிவு
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநாடு கன்னியாகுமரி ஒய்எம்சிஏ அரங்கில் சங்க தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளருமான ரசல் தலைமையில் நடைபெற்றது.;
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர் சங்க மாநாடு நேற்று கன்னியாகுமரி ஒய்எம்சிஏ அரங்கில் சங்க தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளருமான ரசல் தலைமையில் நடைபெற்றது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தூத்துக்குடி படகுத்துறை மற்றும் சென்னை தலைமை அலுவலகத்தில் பணிசெய்யும் தொழிலாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டை சிஐடியு கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தங்கமோகனன் துவக்கி வைத்து பேசினார். மூன்று ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் குறித்த அறிக்கையை பொதுச்செயலாளர் சகாய பார்சலின் முன்வைத்தார். வரவு செலவு அறிக்கையை சங்க பொருளாளர் முத்துவேல்பிள்ளை முன்மொழிந்தார். செயலாளர் அறிக்கை மற்றும் பொருளாளரின் வரவு செலவு அறிக்கையின் மீது சங்க உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். சிஐடியு தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் அன்டனி நிக்சன் மாநாட்டை வாழ்த்தி பேசினார்.
மாநாட்டில் 2019 ஏப்ரல் 1 முதல் நிலுவையில் இருந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை சிஐடியு மற்றும் தொமுச சங்கங்களோடு பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழக சிறு துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோரது ஒத்துழைப்போடு உடன்பாடு ஏற்பட்டதற்கும், ஒப்பந்த தொழிலாளியாக நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த லஸ்கர்களுக்கு பயிற்சி அளித்து 6 பேருக்கு செராங்க் மற்றும் 6 பேருக்கு எஞ்சின் டிரைவர் சான்றிதழ்கள் தமிழ்நாடு கடல்சார் கழகம் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்ததற்கும் தமிழக அரசுக்கும் பூம்பகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தி வரும் தமிழக அரசு மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்த கழகத்தின் நடவடிக்கைகளால் மே மாதம் 3.19 லட்சம் சுற்றுலா பயணிகள் பூம்புகார் படகுகளில் பயணித்து நிறுவனம் 5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதற்கும் பாராட்டு தெரிவித்ததுடன், படகுத்துறை மேம்பாட்டிற்கு மேலும் புதிய திட்டங்களை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்றும், பூம்புகார் வளாகத்தில் உள்ள கேண்டீனை மேம்படுத்தி வெளிப்படைத்தன்மையுடன் பராமரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
அரசு நிறுவனங்களில் நீண்டகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவோம் என்ற திராவிட முன்னேற்ற கழக வாக்குறுதிப்படி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை, தொழிலாளர் அலுவலர் உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் அடிப்படையிலும் அவர்களுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஒப்பந்த தொழிலாளிகளாக பணிபுரியும் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதா மாதம் 7-ம் தேதியன்று சம்பளம் பட்டுவாடா, சென்னையில் உள்ளது போல் வாரம் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 26-ம்தேதி கன்னியாகுமரி படகுத்துறை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் தலைவராக ரசல், சிறப்பு தலைவராக சகாய மெர்சலின், பொதுச்செயலாளராக விஷ்வநாத், பொருளாளராக முத்துவேல்பிள்ளை, துணைத்தலைவர்களாக தங்கமோகனன், ஜோசப்ராஜ், ஜஸ்டின் தப்பிராஜ், துணைச் செயலாளர்களாக ஜெயச்சந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும் நிர்வாகக்குழு உறுப்பினராக செல்லி, ஜெயராம், சுரேஷ், போகர், அருண்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் பொதுச் செயலாளர் மரகதசேகர் நன்றி கூறினார்.