இளம்பெண்ணிடம் 110 பவுன் நகைகள் மோசடி-உல்லாசமாக இருந்த படத்தை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது
திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு, இளம்பெண்ணிடம் 110 பவுன் நகைகள் மோசடி செய்த டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.;
சென்னை,
சென்னை அடுத்த கொளத்தூர் ராஜமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை அண்ணா நகரில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார்.அப்போது கொரட்டூரைச் சேர்ந்த சிவா (வயது 51) என்பவருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி 4 ஆண்டுகள் பழகி வந்த சிவா, தான் ஓட்டல் ஒன்று அமைக்க போவதாகவும், அதற்கு உன்னிடம் உள்ள 110 பவுன் தங்க நகைகளையும், ரூ.1 லட்சம் ரொக்க பணத்தையும் தருமாறு கேட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள போவதை உண்மை என்று நம்பிய அந்த இளம் பெண், பணம், நகையை நம்பி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் சிவா வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னை ஏமாற்றி பெற்ற நகைகளையும், ரொக்க பணத்தையும் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த சிவா இளம்பெண்ணை தாக்கியதுடன், பணம், நகையை திருப்பி கேட்டால் இருவரும் சேர்ந்து உல்லாசமாக இருந்த ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.இது தொடர்பாக இளம் பெண் ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.