ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கி உள்ளது.;
திண்டிவனம்,
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கட்சியின் நிறுவனர் ராமதாசால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இதன்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருவதால், யாருடன் நிற்பது என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே கடந்த 9 ம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்குழுவில் பாமகவின் தலைவராக அன்புமணிக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ராமதாஸ் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது
இதனிடையே, பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி புதுச்சேரி - திண்டிவனம் சாலையில், விழுப்புரத்தில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டிருந்தன. பொதுக்குழுவில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக அன்புமணியின் அதிகாரத்தை நீக்கி விட்டு ராமதாஸ் மகள் காந்திமதிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல பொதுக்குழுவில் புதிய இளைஞர் அணி தலைவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.