அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க இருந்த தம்பி படுகொலை - 4 பேர் வெறிச்செயல்
அந்த வாலிபர் தனது வீட்டின் அருகே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.;
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருடைய மனைவி முனீசுவரி. இவர்களுக்கு வைரம், ஈசுவரபாண்டியன், கணேஷ்பாண்டியன் (வயது 20) என 3 மகன்கள். இதில் ஈசுவரபாண்டியனும், கணேஷ்பாண்டியனும் கட்டிட தொழிலாளிகள். வெள்ளைச்சாமி அதே பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார்.
வெள்ளைச்சாமி குடும்பத்துக்கும், அதே பகுதியை சேர்ந்த கோகுல்குமார் (28) குடும்பத்துக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில் வெள்ளைச்சாமியின் மனைவி முனீசுவரி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனீசுவரி தரப்பில் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து கோகுல்குமார், அவருடைய அண்ணன் கார்த்திக் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
அதே ஆண்டில் ஈசுவரபாண்டியன் தனது நண்பருடன் நேருஜிநகர் பகுதியில் இரவு நேரத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோகுல்குமார் உள்பட 4 பேர் சேர்ந்து, ஈசுவரபாண்டியனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி கோகுல்குமார் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
இந்த கொலை வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளைச்சாமி, முனீசுவரி ஆகியோர் சாட்சியம் அளித்த நிலையில் அடுத்த விசாரணையின்போது, ஈசுவரபாண்டியனின் தம்பியான கணேஷ்பாண்டியன் சாட்சியம் அளிக்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்லக்கக்கூடாது என்று கோகுல்குமார் தரப்பில் வெள்ளைச்சாமி குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை கணேஷ்பாண்டியன் சொந்த வேலையாக தேனிக்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் சிவகாசிக்கு வந்தார். அவரை கொலை செய்யும் திட்டத்துடன் கோகுல்குமார் தரப்பினர் காத்திருந்ததாக கூறப்படுகிறது. கணேஷ் பாண்டியன் தனது வீட்டின் அருகே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கோகுல்குமார், அவரது நண்பர்களான நேருஜி நகரை சேர்ந்த சேகர் மகன் கணேச பாண்டி (24), காந்திநகரை சேர்ந்த பாண்டி மகன் ராஜேஷ் (21), பாறைப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் (30) ஆகியோர் சேர்ந்து கணேஷ்பாண்டியனை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.
இந்த சம்பவத்தை பார்ததும் தடுக்க வந்த அவரது தாய் முனீசுவரியை நோக்கி அந்த கும்பல் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கணேஷ்பாண்டியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த படுகொலை சம்பவம் குறித்து முனீசுவரி அளித்த புகாரின்பேரில் கோகுல்குமார், கணேச பாண்டி, ராஜேஷ், பிரவீன் குமார் ஆகிய 4 பேரை சிவகாசி டவுன் போலீசார் தேடி வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கணேஷ்பாண்டியன் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரித்தார். கணேஷ் பாண்டியன் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் நேற்று மதியம் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அப்பகுதியில் பதுங்கி இருந்த கோகுல்குமார் உள்பட 4 பேரை சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.