பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்: அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி மாநகராட்சி பி&டி காலனி மடத்தூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு மருத்துவப் பிரிவினை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிகிச்சை முறையை பார்வையிட்டார்.;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து தூத்துக்குடி மாநகராட்சி பி&டி காலனி மடத்தூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பல்நோக்கு மருத்துவப் பிரிவினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிகிச்சை முறையினை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவப் பிரிவு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பொதுநல மருத்துவம், மகப்பேறு மருத்தும், குழந்தைகள் நலன், கண், பல், மனநல மருத்துவம், தோல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிடைக்கிறது என்றால், மக்களுக்கு தேவையான சிகிச்கைகளை வசிக்கின்ற இடத்திலேயே கொண்டு சேர்க்கக்கூடிய வகையில் பணியினை செய்து வருகிறார்கள். ஆகவே தமிழ்நாடு முதல்-அமைச்சரின் எண்ணம் வெற்றிகரமாக இருக்கும். மேலும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு பொதுமக்களின் சார்பாக நன்றியை கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன், கவுன்சிலர்கள் இசக்கியப்பன், கண்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.