தமிழகத்தில் 2,436 ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் 24-ந்தேதி வழங்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
2011-ம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவு தேர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கள்ளக்குறிச்சி நீலமங்கலத்தில் உள்ள ஏ.கே.டி. பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வருகிற 24-ந்தேதி 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழக்கப்பட உள்ளது. இந்த ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். 2011-ம் ஆண்டிற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இது. அந்த நாள் பள்ளிக்கல்வித்துறையின் பெருமை மிகுந்த நாளாக அமையும்.
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பகுதி நேர ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் ஊதிய உயர்வு, வயது வரம்பு தளர்வு, பணிமாறுதல், கலந்தாய்வு உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதி அளித்துள்ளோம். அதற்கு ஏற்ப கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு வரும். தமிழ்நாட்டின் நிதி நிலைமைக்கேற்ப தகுந்த முடிவை முதல்-அமைச்சர் உரிய நேரத்தில் எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.