திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்... அதிமுக மீது பரபரப்பு குற்றச்சாட்டு
சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான் என்று மைத்ரேயன் கூறினார்.;
சென்னை,
சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.
2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.
இதையடுத்து கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மைத்ரேயன் கூறியதாவது:-
மண், மொழி, மானம் காக்க ஓரணியில் என்ற தளபதியின் ஆணைக்கினங்க இன்றைக்கு தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் என்னை திமுகவில் இணைத்துக்கொண்டேன். தளபதியின் சிப்பாய்களில் ஒருவராக இணைந்துக் கொள்ள விரும்பி திமுகவில் இணைந்துள்ளேன். மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, சமுதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றுதான். 2வது இடத்திற்குதான் போட்டி நடக்கும். நாளை மறுநாள் (சுதந்திர தினம்) கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைக்க உள்ளார். அதைபோல அடுத்த ஆண்டு (2026) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தேசியக்கொடி ஏற்றி வைக்க உள்ளார்.
அதிமுகவின் தற்போதைய போக்கு சரியாக இல்லை. அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிக்காமல், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவிக்கிறார். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார்; ஈபிஎஸ் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது. டெல்லி என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அதிமுக தலைமை இருக்கிறது.
நாளைக்கு ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால்கூட பாஜகவின் பங்கு எந்தளவிற்கு இருக்கும்.. மத்திய அரசின் தலையீடு எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு மக்கள் யோசிப்பார்கள். பல்வேறு நிர்வாகிகள் மன புழுக்கத்தில் இருக்கின்றனர். ஒருசிலர் நபர்கள் திட்டமிட்டு கட்சியை கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். இவ்வாறு அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. எனக்கு அமைப்புச் செயலாளர் பதவியை கொடுத்தார்கள். ஆனால் என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை; இதனாலே திமுகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.