ஓ.பன்னீர்செல்வம் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம் - நயினார் நாகேந்திரன் பேட்டி
தி.மு.க. ஆட்சியின்மீது மக்களிடம் 100 சதவீதம் எதிர்ப்பு இருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எங்களது கூட்டணி பலமாக உள்ளது. அ.தி.மு.க.வில் சில முறையான ஏற்பாடுகள் முடிந்த பின்னர் எடப்பாடி பழனிசாமி எல்லோருடைய பெயரையும் சொல்வார். ஓ.பன்னீர்செல்வம் வந்தால் சந்தோஷம். டி.டி.வி.தினகரன் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார். அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறேன். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனுடன் ஒரே மேடையில் ஏறுவோம்.
தி.மு.க. ஆட்சியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடும்போது நிறைய வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதை போல மாய தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர். தி.மு.க. தோல்வி பயத்தில் இருக்கிறது. இந்த ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, கொலை, கஞ்சா கடத்தல், போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
வழக்கமாக ஆளுங்கட்சிக்கு 10 சதவீதம் எதிர்ப்பு இருக்கும். ஆனால் இந்த ஆட்சியின்மீது 100 சதவீதம் எதிர்ப்பு மக்களிடம் இருக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் "ஓ.பன்னீர்செல்வத்தின் சுயமரியாதை பாதிக்கக்கூடிய அளவிற்கு கூட்டணியில் என்ன செய்தீர்கள்?" என்ற கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் பதில் அளிக்கும்போது எல்லோருக்கும் சுயமரியாதை முக்கியம். உங்களுக்கும் முக்கியம். எனக்கும் முக்கியம். வெகுவிரைவில் நீங்கள் நினைப்பது போல் நடக்கும் என்றார்.