பயணிகளை இறக்கிவிட்டு அரசு பஸ் ஜப்தி- கோயம்பேடு பஸ்நிலையத்தில் பரபரப்பு
கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு செல்லும் அரசு சொகுசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்;
சென்னை,
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். சில காரணங்களுக்காக அவர் பணியிட நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டுக்கு சென்று அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார். அவருக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர்.
இது குறித்து பன்னீர்செல்வம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு நிலுவைத் தொகை ரூ.11 லட்சத்தை தரவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இதுவரையிலும் அந்த பணத்தை பன்னீர்செல்வத்துக்கு வழங்காததால் வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்சை ஜப்தி செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு செல்லும் அரசு சொகுசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர். இதனால் அரசு பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு, வேறு பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.