ஞானசேகரன் வழக்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு; மீண்டும் வருவேன் - தேசிய மகளிர் ஆணைய தலைவி பேட்டி

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆய்வு செய்த தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா, கல்லூரியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.;

Update:2025-07-26 18:42 IST

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.

ஞானசேகரன் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் வரலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையில் ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டுக்கு மார்ச் 7-ந்தேதி மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் சாட்சிகள் விசாரணை ஏப்ரல் 23-ந்தேதி முதல் தொடங்கியது. தினந்தோறும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. 75 சாட்சி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 29 பேர் சாட்சியம் அளித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 20-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை 28-ந்தேதி வழங்குவதாக நீதிபதி ராஜலட்சுமி அறிவித்து இருந்தார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த மே மாதம் 28-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு என்ன தண்டனை வழங்குவது? என்பது குறித்து ஜூன் 2-ந்தேதி அறிவிக்கப்படும் என உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், 30 ஆண்டுகள் எந்த தண்டனை குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஞானசேகரன் ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா ரஹத்கர், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர், அவர் அளித்துள்ள பேட்டியில், கல்லூரியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். ஞானசேகரன் வழக்கின் முழு விவரங்களை கேட்டறிந்தேன். மீண்டும் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் வருவேன் என தெரிவித்தார். மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை தான் சந்திக்கவில்லை என்றும் விஜயா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்