70 ஆண்டுகள் ஆனாலும் திமுகவிற்கு தமிழகத்தில் இனி இடமில்லை - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுமென எடப்பாடி பழனிசாமி பேசினார்.;
நெல்லை,
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலியில் உள்ள தனியார் ஹோட்டலில் விவசாய மற்றும் வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து உரையாடல் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது;
"இயற்கை விவசாயத்தில் இருக்கும் பிரச்சினைகளைப் பேசினீர்கள். நாம் உடல்நலத்தோடு வாழ்வதற்கு இயற்கை விவசாயம் மூலம் விளையும் உணவுகளை அதிகம் உண்ண வேண்டியது அவசியம். அப்போதுதான் எந்த நோயும் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ள முடியும். இன்று இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வந்துள்ளது. அதிக விலை கொடுத்து இயற்கை பொருட்களை வாங்குகிறார்கள். அதிமுக அரசு அமைந்த பிறகு இயற்கை விவசாயத்துக்கு முடிந்த அளவில் உதவி செய்வோம்.
பாபநாசம் மணிமுத்தாறு, தாமிரபரணி நதிகளில் இருக்கிற வண்டல் மண்ணை தூர் வார வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதிமுக ஆட்சியில் ஏரி கண்மாய்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு தூர் வாரப்பட்டன. இன்று பொதுப்பணித்துறையின் கீழ் 14 ஆயிரம் ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 24 ஆயிரம் குளம், குட்டைகள், ஏரிகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான ஏரிகளை நாங்கள் தூர் வாரினோம். அதற்காக அதிமுக ஆட்சியில் 1,240 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. நிறைய இடங்களில் கால்வாய்களை கான்கிரீட் கால்வாய்களாக மாற்றிக் கொடுத்தோம். பல இடங்களில் தடுப்பணைகள் கட்டினோம். இடையிலே வந்த அரசு 2 ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டுவதாகச் சொன்னார்கள். இதுவரை ஐந்தாறு தடுப்பணைகளை மட்டும் அறிவித்துவிட்டு எஞ்சியதை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை, அர்ப்பணிப்போடு பணியாற்றக் கூடியவர்களைத் தேர்ந்தெடுத்து நீர் மேலாண்மை பணியில் ஈடுபடுத்தினோம். அவர்கள் மூலம் பல இடங்களில் நீரை சேமிக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தினோம். அதிமுக ஆட்சியில்தான் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடனை 5 ஆண்டுகளில் 2 முறை தள்ளுபடி செய்தோம். விதை மானியம், நடவு மானியம் கொடுத்தோம். பயிர் காப்பீடு திட்டம் மூலம் அதிக எண்ணீக்கையிலான விவசாயிகளுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்தது அதிமுக அரசு.
விவசாய நிலங்களை காக்கவும், மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும் பாதுகாக்கப்பட்ட வேலாண் மண்டலங்களை கொண்டுவந்தோம். மும்முனை விவசாயம் வழங்கினோம். இப்போது ஷிப்ட் முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு தொடர்ந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
2017-ல் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்ததும் அதிமுக ஆட்சிதான். கொள்முதல் நிலையங்கள் நெல்லை கொள்முதல் செய்ய தாமதம் ஆவதால், பல இடங்களில் நெல் மணிகள் திறந்தவெளியில் போட்டுவைக்கப்பட்டு சேதமடைவதாக கூறினார்கள், அதிமுக ஆட்சி வந்ததும் நெல் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
முதல்வர் என்றால் அதிகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அதில் ஆர்வம் இருந்த்து. குறிப்பாக விவசாயம், வணிகர்கள் பிரச்சினையில் ஆர்வம் இருந்தது. எங்கள் ஆட்சியில் வணிகர்களை வாட்டி வதைக்கவில்லை. இன்று அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறினார்கள். யாரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கினோம். 7வது முறையாக அல்ல, இன்னமும் 70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுகவிற்கு தமிழகத்தில் இடமே இல்லை. தமிழக மக்கள் ஏற்றம் பெறும் வரை நான் ஓயப்போவதில்லை."
இவ்வாறு அவர் கூறினார்.'