வள்ளியூரில் தங்க நகைக்காக மூதாட்டி கொலை: பெண் வேடமிட்ட வாலிபர் கைது

வள்ளியூர் பகுதியில் வீட்டில் இருந்த மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.;

Update:2025-07-17 05:54 IST

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் கடந்த 8.7.2025 அன்று வீட்டில் இருந்த வயதான பெண் (72) ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவரது மகன் பாலசுந்தர் கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் சந்தேக மரண வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மூதாட்டியின் இறப்பு குறித்த காரணத்தை விரைந்து கண்டறிய திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டதன் பேரில், வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் தீவிர புலன் விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த சிசிடிவி பதிவுகளின் மூலம் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒரு பெண்/திருநங்கை அல்லது பெண் வேடமிட்ட ஆண் என சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து சமீபத்தில் வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு பணிக்காக வந்த நபர்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் களக்காடு, சிதம்பரபுரத்தைச் சேர்ந்த வீரவேலின் மகன் விஜய் என்பவர் தனக்குள்ள கடன் பிரச்சினையினை சரி செய்ய, நகைகளை திருட திட்டமிட்டு, பெண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்து அந்த மூதாட்டியை கொலை செய்து, அவர் கழுத்தில் இருந்த தங்க செயின், கைகளில் இருந்த தங்க வளையல்கள், தங்க மோதிரம் மற்றும் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிவிட்டு தப்பியுள்ளார்.

புலன் விசாரணையின் அடிப்படையில் குற்றவாளி விஜய்(28) கைது செய்ப்பட்டு, அவரை விசாரித்த போது, தங்க நகைக்காக மூதாட்டியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

எந்த ஒரு நேரடி சாட்சியோ, சிறு சாட்சியங்களோ இல்லாத நிலையில், சிசிடிவி பதிவில் கிடைத்த சிறிய தகவல்களின் அடிப்படையில் வழக்கை திறமையாக புலனாய்வு செய்து குற்றவாளியை ைகது செய்து திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் வள்ளியூர் காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்