திராவிட மாடல் அரசுதான் இந்தியாவுக்கான திசைகாட்டி - மு.க.ஸ்டாலின் பேச்சு
எதிர்க்கட்சியை விட மலிவான அரசியலை கவர்னர் செய்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
தருமபுரியில் நடந்த அரசு விழாவில் தலைமையேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பேசியதாவது;
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக நானோ, நீங்களோ மட்டும் கூறவில்லை. மத்திய அரசின் புள்ளிவிபரங்களே கூறுகின்றன. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மேடைகளில் கவர்னர் புலம்பி வருகிறார். எதிர்க்கட்சிகள் பேசுவதை பற்றி நான் கவலைப்படவில்லை. அது அவர்களின் அரசியல். எதிர்க்கட்சியை விட மலிவான அரசியலை கவர்னர் செய்கிறார். கவர்னர் மூலம் தனது இழிவான அரசியலை மத்திய பாஜக செய்து வருகிறது. கவர்னர் திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி திராவிடத்தை பழிப்பார். சட்டத்துக்கு ஒப்புதல் தரமாட்டார். இல்லாத திருக்குறளை எழுதி கொடுப்பார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கவர்னர் குற்றம் சாட்டுகிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறும் கவர்னர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளைப் பார்த்து, பாஜக ஆளும் மாநிலங்களில் போய்தான் கம்பு சுற்ற வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக ஆளும் உத்தரபிரதேசம்தான் முதலிடம் வகிக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிரான சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மகளிர் விடியல் பேருந்து பயண திட்டம் பல மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. திராவிட மாடல் அரசுதான் இந்தியாவுக்கான திசைகாட்டி. அடுத்து வரும் ஆட்சியும் உங்களுடைய ஸ்டாலின் ஆட்சிதான். இந்த ஆட்சி உங்களுக்கான ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, ஏழை, எளியோருக்கான ஆட்சி.”
இவ்வாறு அவர் பேசினார்.