போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் சிவசங்கர்
மற்ற இடங்களுக்கும் படிப்படியாக மின்சார பஸ்கள் கொண்டு வரப்படுமென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.;
அரியலூர்,
போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அரியலூர் மாவட்டம் செந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் காற்று மாசு அதிகமாகின்ற போது வாகன போக்குவரத்தை தடை செய்யும் நிலை உள்ளது. இதுபோன்ற பிரச்சினை சென்னையில் வராமல் இருப்பதற்காக முதற்கட்டமாக மின்சார பஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. படிப்படியாக மற்ற இடங்களுக்கும் மின்சார பஸ்கள் கொண்டு வரப்படும். தனியார் சார்ஜிங் மையங்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தபோது பலரும் சாத்தியமில்லாத திட்டம் என தெரிவித்தனர். ஆனால் இன்றைக்கு அதனை வெற்றிகரமான திட்டமாக தமிழக முதல்-அமைச்சர் செயல்படுத்தியுள்ளார். இந்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்தில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர், கர்நாடகா மாநிலத்திலும் விடியல் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஆந்திர மாநிலத்திலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழக முதல்-அமைச்சர் உள்ளார் என்பதை காட்டுகிறது.
போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில், மதிப்பெண் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, 3 ஆயிரத்து 200 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.