பாதிக்கப்பட்ட பெண்களை அச்சுறுத்தினால் 3 ஆண்டுகள் சிறை: திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் தகவல்
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் புதிய பிரிவு 7(C) ஆனது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கிய தடுப்பு கருவியாக விளங்குகிறது.;
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெண்கள் மீதான தொடர்ச்சியான தொல்லை மற்றும் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் (TNPHW Act) புதிய திருத்தமான (Amendment) பிரிவு 7(C) ஆனது அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியான தொல்லை மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக, நிர்வாகத்துறை நடுவர்களால் பாதுகாப்பு ஆணைகள் (Protection Orders) வழங்கப்படுகின்றன.
மேற்சொன்ன சட்டப்பிரிவின் வழிமுறைகளை பயன்படுத்தி, திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், திருநெல்வேலி கோட்டாட்சியரால் பின்வரும் நபர்களுக்கு எதிராக ஒரு வருடத்திற்கான பாதுகாப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
சுத்தமல்லி காவல் நிலையம்- மூன்று நபர்கள், சீதபற்பநல்லூர் காவல் நிலையம்- ஒரு நபர், சிவந்திபட்டி காவல் நிலையம்- ஒரு நபர்.
இந்த பாதுகாப்பு ஆணைகள் அமலில் உள்ள காலத்தில் மேற்சொன்ன நபர்கள் மீண்டும் பாதிக்கப்பட்ட பெண்களை பின் தொடர்ந்து சென்றாலோ, தொந்தரவு செய்தாலோ, அச்சுறுத்தல் செய்தாலோ அல்லது வேறு எந்த வகையிலாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அப்பெண்ணுக்கு தொல்லை செய்தாலோ அல்லது இணைய வழி மூலம் அப்பெண்ணை பின் தொடர்ந்தாலோ, தொடர்பு கொண்டாலோ அல்லது தொந்தரவு செய்யும் விதத்தில் நடந்து கொண்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்ற வகையில் சட்டத்தில் தீர்வுகள் உள்ளன.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த புதிய சட்டப்பிரிவான TNPHW- Section 7(C) ஒரு முக்கிய தடுப்பு கருவியாக விளங்குகிறது. இத்தகைய தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மீதான குற்றங்களை விரைவாக கட்டுப்படுத்துவதற்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் உதவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.