"போதை ஏறி போச்சு" சாராயம் குடித்து அட்டகாசம் செய்த குட்டி யானை
சாராயம் குடித்து விட்டு குட்டி யானை குடியிருப்பு பகுதியில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்தது.;
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே உள்ள வனப்பகுதியில் சமீபத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பேரல்களில் சாராயம் காய்ச்சி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் சாராயம் அழிக்கப்பட்டு, அதை காய்ச்சியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் அட்டப்பாடி அருகே உள்ள பூப்பணி பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் இருந்த சாராயத்தை குட்டி யானை குடித்ததாக தெரிகிறது. பின்னர் அந்த குட்டி யானை குடியிருப்பு பகுதியில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்தது.அது வழக்கமாக நடமாடுவதை போல இல்லாமல், சற்று வித்தியாசமாக போதை ஏறிய நிலையில் உலா வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று குட்டி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குட்டி யானை மீண்டும் சாராயம் குடித்த இடத்துக்கே சென்றது. பின்னர் வனத்துறையினர் பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் குட்டி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து மணலில் பிளாஸ்டிக் பேரலில் புதைத்து வைத்திருந்த சாராயம் அழிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சாராயம் யானைக்கு பிடித்தமானது. அட்டப்பாடி பகுதியில் உள்ள சாராயம் தயாரிப்பு இடங்கள், காட்டு யானை தொல்லையை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. சாராயம் குடித்த பின்னர் குட்டி யானை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்ததால், ரப்பர் குண்டு பயன்படுத்த முடியவில்லை என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.