பாகிஸ்தான் கேட்டதால் சண்டை நிறுத்தம்: நாடாளுமன்றத்தல் மத்திய அரசு விளக்கம்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்சினைகளால் முதல் நாளிலிருந்தே இரு அவைகளிலும் அனல் பறந்தது. அதுவும் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கைவிடக்கோரியும், அது குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டு வருவதால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் தலையீடு காரணமா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்த்தன் சிங் பதில் அளித்து கூறியதாவது:-
சண்டை தொடங்கிய மறுநாளிலேயே இந்தியாவின் முழு நோக்கம் நிறைவேறி விட்டது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன்பேரில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினர். அதில், சண்டை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளையும் இருதரப்பாக பேசி தீர்வு காண்போம் என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி தெளிவாக தெரிவித்து விட்டார். இதேநிலைப்பாடு, அனைத்து நாடுகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.