25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை
தியேட்டர்களில் வெளியாகும் சினிமாக்களும் சில வாரங்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்து விடுகின்றன.;
புதுடெல்லி,
ஓடிடி தளங்களின் வருகையால் வீட்டுக்குள்ளேயே சினிமா, தொடர்கள் என பொழுது போக்கு நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் சினிமாக்களை நேரடியாக ஓடிடி தளங்களிலேயே வெளியிடும் நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தவிர தியேட்டர்களில் வெளியாகும் சினிமாக்களும் சில வாரங்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்து விடுகின்றன.
இப்படிப்பட்ட ஓடிடி தளங்களில் சில ஆபாசம் மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் அடங்கிய படங்கள் மற்றும் தொடர்களை வெளியிடுகின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் சிறுவர்-சிறுமியரின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இத்தகைய ஓடிடி தளங்களை முடக்கியும், தடை விதித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போதும் 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்த தளங்களின் இணையதளங்கள் மற்றும் செல்போன் செயலிகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆல்ட், உல்லு, பிக் ஷாட்ஸ், டெசிபிளிக்ஸ், பூமெக்ஸ், நவரச லைட், குலாப் ஆப், கங்கன் ஆப், வாவ் என்டர்டெயின்மென்ட், லுக் என்டர்டெயின்மென்ட், ஹிட் பிரைம் உள்பட 25 ஓடிடி தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் 2021-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த தளங்கள் எந்த வகையிலும் அணுக முடியாத வகையில் அழித்து விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அரசின் தடைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ள மேற்படி 25 ஓடிடி தளங்களும் நீண்ட காலமாக மறைமுகமான பாலியல் வார்த்தைகள், சமூக சூழலில் எந்தவித கதைக்களமோ, கருப்பொருளோ அல்லது செய்தியும் இல்லாத வெளிப்படையான பாலியல் காட்சிகளை ஒளிபரப்பி வந்ததாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் மேற்படி தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியும் அவை கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் கூறினர். தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஓடிடி தளங்களில் 5 நிறுவனங்கள், ஏற்கனவே தடை செய்யப்பட்டு வேறு பெயரில் இயங்கி வந்தவை என்றும் கண்டறியப்பட்டு உள்ளன.