ஓடும் காரின் மேல் ஏறி நடனமாடிய இளம்பெண் - வைரல் வீடியோ
இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தினர்.;
மும்பை,
மும்பையை அடுத்த நவிமும்பை கார்கர் பகுதியில் கடந்த 20-ந் தேதி சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ஒருவர் 'ஆரா பார்மிங்' சாகசத்தில் ஈடுபட்டார். அவர் ஓடும் காரில் பேனட்டின் மீது ஏறி நின்று இந்தி பாடலுக்கு சாகச நடனமாடும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தள புகழுக்காக உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரில் சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஓடும் கார் மீது ஏறி நின்று சாகசத்தில் ஈடுபட்ட இளம்பெண் சமூகவலைதள பிரபலமான நாஷ்மின் சுல்டே(வயது24) என்பதும், காரை ஓட்டியது அவரது ஆண் நண்பர் அல்பேஷ் சேக்(24) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்தோனேஷியாவை சேர்ந்த 11 வயது சிறுவன் சமீபத்தில் வேகமாக செல்லும் படகின் முன்பகுதியில் ஏறி நின்று வேடிக்கை காட்டி வீடியோ பதிவிட்டு இருந்தான். 'படகு நடனம்' அல்லது 'ஆரா பார்மிங்' என கூறப்படும் சிறுவனின் வேடிக்கை வீடியோ உலகம் முழுவதும் வைரலானது. இதையடுத்து சிறுவனை போல பலர் வாகனங்களில் சென்று ஆபத்தான முறையில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.