சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் என்பது தெரிய வந்துள்ளது.;
சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரோசி(40). இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை ரோசி பெருங்குடி ரெயில் நிலையத்தில் வீட்டிற்கு செல்வதற்காக நடைபாதையில் அமர்ந்து இருந்தார்.
இந்நிலையில், ரெயில் நிலையத்துக்கு திடீரென வந்த இளைஞர் ரோசியை வெகுநேரமாக நோட்டமிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து திடீரென ரோசியின் அருகில் அந்த இளைஞர் வந்து அமர்ந்தார். பின்னர் சற்றும் எதிர்பாராத வகையில் ரோசியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த ரோசி செய்வதறியாது திகைத்து நின்றார். பின்னர் அங்கிருந்தவர்களை அழைத்து கூச்சலிட்டுள்ளார்.
அதற்கு அந்த இளைஞர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார். இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் திருவான்மியூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை அதிரடியாக கைது செய்தனர். சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது. பட்டபகலில் தனியான இருந்ததால் பேச்சு கொடுத்து பெண்ணிடம் கைவரிசை காட்டியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.