தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்
காப்புரிமை பெற்ற ஆழ்நிலை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.;
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்று வரும் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப (ஐடிஎன்டி) மையத்தின் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (30.7.2025) நடைபெற்ற "அறிவுசார் சக்தி மையம், தமிழ்நாட்டை இந்தியாவின் புத்தாக்க தலைநகராக மாற்றுதல்" என்ற கருப்பொருளை கொண்ட "தமிழ்நாட்டின் புத்தமை (IN2TN) அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டை" தொடங்கி வைத்தார்.
மாநாட்டினையொட்டி அமைக்கப்பட்டிருந்த தொழில்நுட்ப கண்காட்சியில், காட்சிப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற ஆழ்நிலை தொழில்நுட்ப (DEEP TECH) கண்டுபிடிப்புகள் அடங்கிய அரங்குகளை பார்வையிட்டு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார். மாநிலத்தின் டிரில்லியன் டாலர் பொருளாதார தொலைநோக்கு பார்வையை நோக்கி உங்களது பயணத்தை தொடரவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தார்.
இந்த மாநாட்டில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐடிஎன்டி மையத்தில் நடத்தப்பட்ட பாத் பைண்டர் நிகழ்ச்சிகளின் மூலம் உள்வளர்ச்சி பெற்ற 5 ஆழ்நிலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு, ஐடிஎன்டி மையத்தின் பவுண்டேஷன் நிதியின் கீழ் விதை நிதியாக மொத்தம் 53.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த மாநாட்டில் துணை முதல்-அமைச்சர் முன்னிலையில், ஐடிஎன்டி மையத்தில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையத்தின் (டிஎன்டிடிஎப்சி) சார்பில் கல்வி ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்த காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகளை தொழில்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான, கல்வி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் ஐடிஎன்டி மையத்தின் ஆதரவு பெற்ற ஆழ்நிலை தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில், ஐடிஎன்டி மையம் அமெரிக்கன் சொசைட்டி ஆப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் இந்தியா(ASME), தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (NRDC), பெங்களூரில் செயல்பட்டு வரும் மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம்(C-DAC), போஷ் (Bosch) இந்தியா, மஹிந்திரா அண்டு மஹிந்திரா (Mahindra and Mahindra) மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் வசதிகள் வரைபடம் (I-STEM) ஆகிய ஆறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்ற வசதி மையத்தின் சட்டபூர்வ பங்குதார்களின் விருப்பக் கடிதங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், வளர்தொழில் காப்பகங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசுத் துறை சேர்ந்த ஆழ்நிலை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், காப்புரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.