கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக நாளை பதிலளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.;
மதுரை,
2 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, 'தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பி வைக்கவும் அனுமதி கிடைத்தால் பெருமையாக இருக்கும்' என்று வெளிப்படையாக கடிதம் எழுதியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். இருப்பினும், பிரதமரை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதே சமயம், எடப்பாடி பழனிசாமி, ஜி.கே வாசன், ஏ.சி. சண்முகம் ஆகியோர் பிரதமரை சந்தித்து பேசினர்.
இது, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஏற்கனவே, தமிழகத்திற்கு வந்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் ஓபிஎஸ்ஸை சந்திக்காமல் தவிர்த்தார். இந்த நிலையில், தற்போது பிரதமரும் ஓபிஎஸ்ஸை புறக்கணிப்பது, அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் கடந்த சில நாட்களாக தேசிய ஜனநாயக கூட்டணியை முறித்துக் கொண்டு ஓபிஎஸ், தவெகவுடன் கைகோர்ப்பார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக, தவெகவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், அந்த கட்சியில் அனுபவம் மிக்க தலைவர்கள் இல்லாததால், ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்தால் அது அக்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும் எனவும் பேசப்பட்டது.
இது ஒறுபுறம் இருக்க, ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து நிர்வாகிகளிடம் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னையில் நாளை காலை செய்தியாளர் சந்திப்பில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன். த.வெ.க.வுடன் கூட்டணி உள்ளிட்ட கேள்விகளுக்கு நாளை பதில் சொல்கிறேன் என்றார்.