மதுபோதையில் போலீஸ் அதிகாரியையே கொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாடு போய் விட்டது: ராமதாஸ் வேதனை
டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.;
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தலைநகர் சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜாராமனை மதுபோதையில் அவருடைய நண்பர்களே அடித்துக் கொலை செய்திருப்பது தமிழ்நாட்டுக்கே தலைகுனிவு. பெரும் இழுக்கு. வெட்கக் கேடான செயல். டாஸ்மாக் போதை கொடுமைக்கு உயிர்கள் பலியாகும் கொடுமை இன்னும் எத்தனை நாளைக்குத் தொடருமோ?
இறந்து போன காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் பிரிவு வார்டின் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான் ராஜாராமன், எழும்பூரில் "ஸ்னூக்கர்" விளையாடப் போன இடத்தில் கடந்த 18-ம் தேதி நண்பர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்திருக்கிறார்.
நண்பர்கள் ராக்கி(எ) ராகேஷ், ஐயப்பன்(எ) சரத்குமார் மதுபோதையில் இருந்ததாக விசாரணையில் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட நண்பர்களோடு மோதல் ஏற்பட்டுதான், ராஜாராமன் தலை உடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு எட்டு நாட்கள் சிகிச்சையில் இருந்து இன்று இறந்திருக்கிறார். டாஸ்மாக் மதுக் கொடுமைகளுக்கு விடிவுகாலம் பிறக்க இன்னும் எத்தனை காலம் இந்த ஊமை ஜனங்கள் காத்திருக்கப் போகிறதோ?.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.