பெரு நாட்டை தாக்கிய மணல் புயல் - பொதுமக்கள் அவதி
சாலைகளில் புழுதிக்காற்று வீசியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
லிமா,
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கடும் மணல் புயல் தாக்கியது. வளிமண்டலத்தில் உருவான உயர் அழுத்த மண்டலத்தால் ஏற்பட்ட தீவிர காற்று காரணமாக இந்த மணல் புயல் உருவானதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென தாக்கிய மணல் புயலால், பெரு நாட்டில் உள்ள இகா, அரிகுவிபா, மோகிகுவா மற்றும் தாக்னா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சாலைகள் மற்றும் கட்டிடங்கள், மணல் மற்றும் புழுதியால் மூடப்பட்டன. சாலைகளில் புழுதிக்காற்று வீசியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
கடலோரப் பகுதிகளிலும் மணல் புயலின் தாக்கம் உணரப்பட்டது. சுமார் 50 கி.மீ. வேகத்தில் 3 மணி நேரம் வரை பலத்த காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.