தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் சட்ட விரோதச் செயல்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-07-26 11:41 IST

கோப்புப்படம்

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தி.மு.க ஆட்சி என்றாலே மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என பல சட்ட விரோதச் செயல்கள் தலைவிரித்து ஆடுவது வாடிக்கை. அதுவும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் சட்ட விரோதச் செயல்களின் புகலிடமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பே தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே ஆற்றுக்குள் சென்று மணலை அள்ளிச் செல்லலாம். எந்த அதிகாரியும் தடுக்கமாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் சொன்னதை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த மணல் கொள்ளைதான் தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றக் கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கடற்கரையில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுக்கப்படுவது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூர் அடுத்த முடியனூர் தென் பெண்ணை ஆற்றில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பல மீட்டர் ஆழத்திற்கு மணல் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவது. மணலூர்பேட்டை அடுத்த சித்தப்பட்டினம் ஏரியில் பட்டப் பகலில் பொக்லைன் இயந்திரம் மூலம் கிராவல் மண் தோண்டப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

அந்த வகையில், கரூர் மாவட்டம், வாங்கலில், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மணல் அள்ளப்பட்டதாகவும், இதனை அறிந்து கொண்ட அந்த இடத்தின் உரிமையாளர் அங்கு சென்று அதை தட்டிக் கேட்டதாகவும். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும், நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மணல் கடத்தல்காரர்களை காவல் துறையினர் தேடி வருவதாகவும் ஒரு வாரத்திற்கு முன்பு செய்தி வந்தது.

தற்போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், காமராஜர் பகுதியைச் சேர்ந்த இருவர் மணல் கடத்தல் தொடர்பாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. தமிழ்நாட்டில் மணல் கடத்தல் நடைபெறுவதும், இதன்மூலம் படுகொலைகள் நடப்பதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை தி.மு.க. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்காமல், அவர்கள்மீது மென்மையான போக்கினை கடைபிடித்து வருவதுதான் இதுபோன்ற கொலைகள் அதிகரிக்க வழிவகுக்குகிறது. தி.மு.க. அரசு இதுபோன்ற மென்மையான போக்கினை கடைபிடிப்பதற்குக் காரணம், ஆளும் கட்சியைச் சார்ந்த முக்கியமான அரசியல் புள்ளிகள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதுதான் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கரூர் அமராவதி மற்றும் காவேரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய புகாரில் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினருக்கு சொந்தமான 26 லாரிகள் கடந்த ஜூன் மாதம் பறிமுதல் செய்யப்பட்டது இதற்கு உதாரணம்.

மணல் கொள்ளை தொடர்ந்து தடைபெறுவதன் மூலம் நிலத்தடி நீர் குறைந்து பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்பட வேண்டிய அவல நிலையும் உருவாகும். தமிழ்நாட்டில் நடைபெறும் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்-அமைச்சர் அவர்களுக்கு உண்டு.

முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும், கொலைகாரர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைப் பெற்றுத் தாவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்