சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - கைது
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.;
சென்னை,
அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காலவரையற்ற போராட்டம் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இப்போராட்டம் இன்று 9-வது நாளாக இன்றும் நீடித்தது.
அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாக முற்றுகைப்போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்டனர். திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரி முழக்கத்தில் ஈடுபட்டனர்.
டி.பி.ஐ., வளாகம் அருகே, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 9-வது நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.