ஜூலை 30-ந்தேதி மருத்துவ கலந்தாய்வு - அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் இளங்கலை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்டப் படிப்பிற்காக 72,743 பேர் விண்ணப்பித்துள்ளனர்.;

Update:2025-07-16 17:16 IST

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இளங்கலை எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 5-ந்தேதியில் இருந்து ஜூன் 29-ந்தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 72,743 விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

ஒருசில விண்ணப்பங்களில் சான்றிதழ்களை இணைக்க சில மாணவர்கள் மறந்து விட்டனர். அவர்களுக்காக 2 நாள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த 2 நாளில் சான்றிதழ்கள் இணைத்து மீண்டும் தந்தால் அந்த விண்ணப்பங்கள் சரி பார்த்து தகுதி பட்டியலில் சேர்க்கப்படும்.

இதற்கிடையே 20 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் போலி சான்றிதழில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த 20 மாணவர்களுக்கும் கலந்தாய்வில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறது. 3 வருடங்களுக்கு இவர்கள் தமிழ் நாடு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

20 மாணவர்களில் 7 மாணவர்கள் பிறப்பிட சான்றிதழை போலியாக தந்துள்ளனர். 9 பேர் சாதி சான்றிதழை போலியாக தந்து உள்ளனர். 4 பேர் என்.ஆர்.ஐ. தகுதிக்கான தூதரக சான்றிதழை போலியாக தந்து உள்ளனர். சான்றிதழ் சரிபார்க்க இறுதி நாளாக 18.10.25 காலை 10 மணி வரை உள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை முடிந்து இறுதிப்பட்டியல் வருகிற 25-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

மெரிட் ரிசல்ட் 25-ந்தேதி வெளியிடப்படும். அதன் பிறகு மத்திய அரசின் கால அட்டவணைப்படி தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 30-ந்தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்