கவினை வெட்டிக்கொன்றது எப்படி?... சம்பவ இடத்தில் நடித்து காட்டிய சுர்ஜித்

கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் தம்பி சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-08-13 06:46 IST

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின் செல்வ கணேஷ் (வயது 27). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் காதல் விவகாரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் தம்பி சுர்ஜித், தந்தை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்களிடம் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த கொலைக்கு பின்னால் வேறு யாரும் உள்ளனரா?, யாரிடமாவது உதவி கேட்டனரா?, கொலைக்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கேள்விகளை கேட்டனர். இந்த கேள்விகளுக்கு 2 பேரும் ஒரே மாதிரி பதில்கள் கொடுக்கிறார்களா? அல்லது பதில்களில் வித்தியாசம் ஏற்படுகிறதா? என்பதையும் பதிவு செய்து கொண்டனர்.

இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையில் சுர்ஜித்தை கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் வேனில் அழைத்து சென்றனர். வேனை விட்டு இறங்கிய சுர்ஜித் துணியால் முகத்தை மறைத்திருந்தார். அப்போது சுர்ஜித்திடம் எந்த இடத்தில் இருந்து கவினை அழைத்து சென்றாய்?, எந்த இடத்தில் இறக்கிவிட்டு பேசினாய்? எத்தனை மணிக்கு கொலை நடந்தது? கொலை செய்யும்போது யாரும் பார்த்தார்களா? கவினை எப்படி வெட்டிக்கொலை செய்தாய்? கொலை செய்த பிறகு கவினின் உடல் எங்கு கிடந்தது? என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

பின்னர் கவினை வெட்டிக்கொன்றது எப்படி? என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன்னிலையில் சுர்ஜித் நடித்து காட்டினார். கொலை நடந்த இடத்துக்கு எப்படி கவினை அழைத்து வந்தேன்? என விளக்கிய சுர்ஜித், அரிவாளை எடுக்கும்போது தவறுதலாக அரிவாள் கீழே விழுந்தது. அதனை கவின் பார்த்துவிட்டு ஓட்டம்பிடித்தார்.

ஆனாலும் கீழே விழுந்த அரிவாளை எடுத்து கவினை துரத்தி சென்று வெட்டியது எப்படி? என்பது குறித்து ஒவ்வொரு இடமாக சென்று தத்ரூபமாக நடித்து காட்டினார். அதேபோல் கொலை செய்துவிட்டு ஆயுதத்தை வேறொரு இடத்தில் சுர்ஜித் வீசியுள்ளார். அந்த இடத்தையும் போலீசாரிடம் காண்பித்தார். இவை அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோவில் பதிவு செய்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்