ரஷியாவில் படித்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு பணம் அனுப்புவதாக ரூ.5.90 கோடி மோசடி: டாக்டர் கைது

ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை வேலைகளை பகுதி நேர பணியாக டாக்டர் செய்து வந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-08-01 19:56 IST

திருச்சி,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி அருகில் வசித்து வருபவர் ஜெய் சரண் (வயது 25). ரஷியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் தற்போது சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மேலும் ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை வேலைகளையும் பகுதி நேர பணியாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்யா மாவட்டம் கங்காவரத்தை சேர்ந்த ரவிகுமார் (55) என்பவர் ரஷியாவில் படித்து வரும் தனது மகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்காக, ஜெய் சரணை தொடர்பு கொண்டு அவருக்கு ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் பணம் அனுப்பி உள்ளார். ஆனால் ஜெய் சரண் அந்த பணத்தை அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த பணத்தை ரவிகுமார் திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து ரவிகுமார் கொடுத்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜெய் சரண் ரஷியாவில் படித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுபோல் ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவதாக கூறி ரூ.5 கோடியே 90 லட்சம் வரை ஏமாற்றி மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஜெய்சரணை கைது செய்த போலீசார் அவரை துறையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்