சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.;

Update:2025-08-04 09:20 IST

வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் கார் முதல் விற்பனை தொடக்க விழா ஆகியவை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.

காலை 10 மணியளவில் தூத்துக்குடி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வின்பாஸ்ட் ஆலைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ஆலையை திறந்து வைத்து, கார் விற்பனையையும் தொடங்கி வைக்கிறார்.

பின்னர் மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. மேலும், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில நிறுவனங்களையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்