மராட்டியம்: விமான நிலையத்தில் நாட்டு துப்பாக்கியுடன் பிடிபட்ட பயணி
விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு விமானம் புறப்படவிருந்தது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லிக்கு விமானம் புறப்படவிருந்தது.
இந்த விமானத்தில் அனில் ஸ்ரீகிருஷ்ன பரோட் என்ற பயணி டெல்லிக்கு செல்லவிருந்தார். அப்போது, விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மத்திய தொழிற்பாதுகாப்புப்படையினர், விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர்.
அதில், பயணி அனில் ஸ்ரீகிருஷ்ன பரோட்டின் பையில் நாட்டு துப்பாக்கி மற்றும் 2 தோட்டாக்கள் இருந்ததை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பயணி ஸ்ரீகிருஷ்னாவிடம் பாதுகாப்புப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்ரீகிருஷ்னா பா.ஜ.க. பழங்குடியின பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்ரீகிருஷ்ன பரோட்டை கைது செய்த பாதுகாப்புப்படையினர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.